

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் மீது பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக 3 பெண்கள் தனித்தனியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் காசியை 6 நாள் காவலில் எடுத்துள்ளனர். ஏன் எனில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காசியை போலீசார் காவலில் எடுத்து இருக்கிறார்கள்.
அதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்று காசியிடம் போலீசார் கேட்டுள்ளனர். அப்போது அவராக எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்றும், தன்னுடன் பழகியவர்களுடன்தான் பழகியதாகவும் கூறியுள்ளார். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். எனினும் காசியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காசியின் கூட்டாளிகள் வேறு யாரெல்லாம் என்று போலீசார் தொடர்ந்து கேள்வி கேட்பதாகவும், அதற்கு அவர் மழுப்பலாக பதில் சொல்வதாகவும் தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காசி தொடர்பாக ஏதாவது புதிய புகார்கள் அல்லது ஆதாரங்கள் சிக்குமா? என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதுபோல பாதிக்கப்பட்டவர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கூட புகார் அளிக்கலாம். காசி பயன்படுத்திய லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.