

திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள திருக்கோவிலூர் -திருச்சி மெயின்ரோட்டில் உள்ள செட்டித்தாங்கல் கிராமத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்திற்குள் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் கோவிலில் உள்ள சூலம் போன்ற ஆயுதத்துடன் உள்ளே புகுந்தனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கேமராவில் மர்ம மனிதர்களின் உருவம் பதிவாகாமல் இருக்க அங்குள்ள சி.சி.டி.வி கேமரா மீது துண்டுபோட்டு மறைத்தனர்.
பின்னர் அவர்கள் கொண்டு வந்த சூலத்தை கொண்டு தாக்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அருகே ஏரிக்கரை மூலையில் உள்ள தேசியமயமாக்கபட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மையத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த ஏ.டி.எம் எந்திரத்தையும் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் உடைத்தனர். அதில் பணம் வைத்திருக்கும் அறையை உடைக்க முயன்றனர். ஆனால்முடியவில்லை. அதன் பின்னர் அவர்கள் வந்து சென்றதை போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்க ஏ.டி.எம் மையம் முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையர்கள் மின்வினியோகத்தை தடைசெய்துள்ளனர். இன்று காலை அந்த ஏ.டி.எம்.க்கு சென்ற பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.