

திருப்பூர்:
இலங்கையை சேர்ந்த ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்வதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்த பிரேம் குமார் என்பது தெரியவந்தது. இவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது போலி ஆவணங்கள் மூலம் பெற்றப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் திருப்பூர் ஓடக்காட்டை சேர்ந்த திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்குமார் (வயது 40) என்பவரிடம் ரூ-.28 லட்சம் கொடுத்து போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
ராஜ்குமார் திருப்பூரில் பனியன் நிறுவனம் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கனடாவுக்கு, தொழில் சம்பந்தமாக செல்லும்போது சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று பிரேம்குமாரை அங்கு நிரந்தரமாக தங்க வைக்க, ராஜ்மோகன்குமார் திட்டமிட்டிருந்தார். ராஜ்மோகன் குமார், அவரது பெண் உதவியாளர் பாரதி மற்றும் பிரேம்குமார் ஆகியோரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். ராஜ்மோகன் நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.
ராஜ்மோகன், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும்போது இதே பாணியில் 7 பேரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். எனவே அவர்கள் 7 பேர் யார்? அவர்களை எந்த நாட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அதற்காக அவர்களிடம் எவ்வளவு பணம் பெற்றார் என்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மேலும் சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ராஜ்மோகன், சமீபத்தில், களவாணி 2 படத்தில் நடித்துள்ளார். ராஜ்மோகன் குமார் கைது குறித்த தகவல் ரகசியமாக இருந்தது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் இருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.