அமெரிக்காவில் தப்பி ஓடிய சர்க்கஸ் புலியால் பரபரப்பு

அமெரிக்காவில் சர்க்கஸ்சில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்ட புலி தப்பி ஓடியதால் மக்களிடையே பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது. இந்நிலையில் தப்பி ஓடிய அந்தப் புலியை போலீசார் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவில் தப்பி ஓடிய சர்க்கஸ் புலியால் பரபரப்பு
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சர்க்கஸ்சில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்ட புலிகள் உள்ளிட்ட விலங்குகளை ஒரு வாகனத்தில் நேற்றுமுன்தினம் ஏற்றிச் சென்றனர். இந்த வாகனம், அட்லாண்டா புறநகரில் சென்று கொண்டிருந்தபோது அதில் இருந்து ஒரு பெண் வங்காளப்புலி மட்டும் தப்பி ஓட்டம் பிடித்தது.

தப்பி ஓடிய இந்தப் புலி, அந்தப் பகுதியில் உள்ள செல்லப்பிராணிகளை வேட்டையாடி தின்னத் தொடங்கியது. இதனால் அந்தப்பகுதி மக்களிடையே பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது.

இதையடுத்து தப்பி ஓடிய அந்தப் புலியை ஜார்ஜியா மாகாண போலீசார் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர்.

இதுபற்றி ஜார்ஜியா மாகாண இயற்கை வளங்கள் துறை விடுத்துள்ள அறிக்கையில், “அட்லாண்டா பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் மீது தப்பி ஓடிய புலி தீவிர நாட்டம் காட்டியதால், பொது நலன் கருதி அதை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விட்டது” என கூறப்பட்டுள்ளது. இந்தப் புலியை சுட்டுக்கொன்ற செய்தி அறிந்த பின்னர்தான் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட வங்காளப் பெண் புலிக்கு வயது 6. அதன் பெயர் சூஸி.

ஐரோப்பாவுக்கு செல்லும் வழியில் புளோரிடா மாகாணத்தில் இருந்து டென்னிசி மாகாணத்துக்கு கொண்டு சென்றபோதுதான் அந்தப் புலி தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com