

பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அம்மாநில போலீசார், தார்வாட் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவா மாநில பதிவு எண்ணை கொண்ட ஒரு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது கோவாவில் இருந்து ஹூபளி பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 7.7 கிலோ தங்க நகைகள் அந்த வாகனத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அண்டை மாநிலத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட சுமார் 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார், கோவா தலைநகர் பனாஜியை சேர்ந்த பிரதிக் பிரதீப் நர்வேகர்(27) மற்றும் விக்ரம் ரத்தோட் (32) ஆகிய இருவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். #tamilnews #goldseized