காஷ்மீரின் அனந்த்நாக்கில் தீவிரவாத தாக்குதல்: 6 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரின் அனந்த்நாக்கில் தீவிரவாத தாக்குதல்: 6 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
Published on

அனந்த்நாக்:

தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அச்சாபால் நகர் அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது இன்று தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் போலீஸ் நிலைய அதிகாரி உள்பட 6 போலீசார் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களில் 2 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10-15 தீவிரவாதிகள் தாககுதல் நடத்தியதாகவும், அவர்கள் போலீசாரின் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு கூடுதல் போலீசார் மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

அர்மானி கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த தாககுதல் நடந்துள்ளது. எனவே, இது பழிவாங்கும் தாக்குதலாக இருக்கலாம் என போலீஸ் தெரிவித்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com