வைரமுத்துவுக்கு மிரட்டல்: எச்.ராஜா - நித்தியானந்தா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துக்கு கடுமையாக விமர்சித்த எச்.ராஜா, நித்தியானந்தா மற்றும் அவரின் சீடர்கள் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வைரமுத்துவுக்கு மிரட்டல்: எச்.ராஜா - நித்தியானந்தா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்
Published on

சென்னை:

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்ததோடு கடுமையாக அவரை விமர்சனம் செய்தார்.

நித்யானந்தா சீடர்களும் சமூக வலைதளத்தில் விமர்சித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. இங்கு எல்லா மதத்தை சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். சகோதரத்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்ற மக்களிடம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக எச்.ராஜா பேசி வருகிறார். கவிஞர் வைரமுத்துவை கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி வருகிறார். இது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல.

இவரின் செயல்பாடு பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. எனவே எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

ஆண்டாள் விவகாரத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் சமூக வலைதளத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்போல் விமர்சித்து வருகிறார்கள்.

ஆன்மீகம் என்ற பெயரில் ஆபாசத்தை போதிக்கும் நித்யானந்தா மற்றும் அவரின் சீடர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com