போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று காலை ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
Published on

சென்னை:

திரிசூலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வளர்மதி. மகன் செல்வகுமார், மகள் ஜெனீபர்.

இன்று காலை ஜெயராமன் தனது குடும்பத்துடன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென்று வாசலில் நின்று கொண்டு மண்எண்ணையை உடலில் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்து போலீசார் ஓடி சென்று அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினார்கள். தீக்குளிக்க முயன்றது குறித்து ஜெயராமன் கூறுகையில், “எனது வீட்டுக்கு செல்லும் பாதையில் சிலர் மோட்டார் சைக்கிளை வழி மறித்து வைத்து தகராறு செய்து வந்தனர்.

இதுகுறித்து கடந்த 6-ந்தேதி பல்லாவரம் போலீசில் புகார் செய்தேன். இதனால் சிலர் எனது வீட்டு மாடி படியை கடப்பாரையால் இடித்தனர். மேலும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்கள்.

இதுகுறித்து பல்லாவரம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க வந்தேன்” என்றார்.

இதையடுத்த ஜெயராமனை வேப்பேரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com