திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலையை தேடும் போலீஸ்

திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள எட்டிகுளத்துப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது உடல் மேலே எடுக்கப்பட்டது. தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த அவருக்கு சுமார் 35 வயது இருக்கும்.

ஆனால் உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் அடையாளம் தெரியவில்லை. போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. இளவரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலையை வெட்டி ஏதேனும் வேறு பகுதியில் வீசி இருக்கலாம் என கருதி அக்கம் பக்கம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதே போல் வெள்ள பொம்மன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றில் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகாத முறையில் பிறந்ததால் யாரேனும் குழந்தையை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபத்தில் பிரசவத்துக்கு சேர்ந்த பெண்களின் விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் பயன்பாடற்ற கிணறுகளை கணக்கீடு செய்து அதனை தூர் வாரவும் முற்றிலும் தண்ணீர் வறண்ட கிணறுகளை மூடவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் கிராமப்புறங்களில் பயன்பாடற்ற கிணறுகள் மூடப்படாததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே இனி வரும் காலங்களிலாவது இது போன்ற கிணறுகளை மூட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com