கிருமாம்பாக்கம் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

கிருமாம்பாக்கம் அருகே சம்பாதிக்கும் பணம் மருத்துவத்திற்கே செலவானதால் விரக்தி அடைந்த கட்டிட மேஸ்திரி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). கட்டிட மேஸ்திரி. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், முத்துக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே சிவக்குமார்க்கு சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

தான் சம்பாதிக்கும் பணம் முழுவதும் மருத்துவத்திற்கே செலவானதால் இதுபற்றி சிவக்குமார் தனது மனைவி புஷ்பாவிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அதற்கு புஷ்பா ஆறுதல் கூறி உடல்நிலை தேறிவிட்டால் சம்பாதித்து கொள்ளலாம் என சமாதானம் செய்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென விரக்தி அடைந்த சிவக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மதுவை வாங்கி வந்து அதில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (வி‌ஷம்) கலந்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மதியம் சிவக்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் முத்துக்குமரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு லூர்துநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com