

சென்னை:
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றப் போவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளர்.
ஆனால் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் அவரது வாரிசு என்ற முறையில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் தாய் சந்தியா போயஸ் கார்டன் வீடு இருக்கும் இடத்தை காலி மனையாகவே வாங்கினார். எனவே அது எங்களுக்கே சொந்தம் என்று இருவரும் கூறியுள்ளனர்.
அதே போல ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் இல்லமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன.
இப்படி வழக்கில் சிக்கிய ஒரு இடத்தை நினைவு இல்லமாக்கும் போது சம்பந்தப்பட்ட கோர்ட்டின் அனுமதியையும் பெற வேண்டியுள்ளது.
இதன்படி சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாரிசுதாரர் என்ற வகையில் தீபக், தீபா இருவரின் அனுமதியும் தேவையாகும்.
இது தொடர்பாக தீபா அணியின் வக்கீல் பசும் பொன்பாண்டியன் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபா, தீபக் இருவரிடமும் உரிய அனுமதி பெற வேண்டும். அவர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். இருவரின் அனுமதியை பெற்றுத்தான் தமிழக அரசு நினைவு இல்லமாக்க முடியும். இது தொடர்பான நடவடிக்கைகளை தீபாவும், தீபக்கும் எடுத்து வருகிறார்கள். இந்த சட்ட சிக்கலை தாண்டித்தான் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்க முடியும்.
இவ்வாறு வக்கீல் பசும் பொன்பாண்டியன் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் கூறியதாவது:-
ஏனென்றால் ஜெயலலிதாவின் வீட்டை அவரது வாரிசுதாரர் அனுமதியின்றி அரசு எடுக்க முடியாது.
ஜெயலலிதா இறந்து விட்டதால் அந்த வீட்டுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் தான் வாரிசு. தற்போது அவரும் இறந்து விட்டதால் அவரது மகன் மகளுக்குதான் போயஸ் கார்டன் வீடு சொந்தமாகும்.
அந்த அடிப்படையில் வாரிசுதாரரிடம் ஒப்புதல் பெற்றுதான் நினைவிடம் ஆக்க முடியும்.
பூர்வீக சொத்தை சம்பந்தபட்டவரின் ஒப்புதல் பெறாமல் நினைவிடம் ஆக்க முடியாது.
சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீசு கொடுத்து முறையாக அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு பால்கனகராஜ் கூறினார்.