

புதுடெல்லி:
இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்து வரும் காஷ்மீரை, பாகிஸ்தானோடு இணைக்க வேண்டும் என்று சில பிரிவினைவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்திய குழுக்களாக போராடி வருகின்றனர்.
இதுபோன்ற பிரிவினைவாத தலைவர்களை கண்காணித்து மத்திய அரசு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, காஷ்மீரில் செயல்பட்டு வந்த பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு நெருக்கமானவரான
ஹவாலா ஏஜெண்ட் முகமது அஸ்லாம் வானி மீது, அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. எனவே, அவரை காஷ்மீரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அஸ்லாம் வானியின் விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரணை நடத்த 10 நாள்கள் தேவை என
அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, அஸ்லாம் வானியின் அமலாக்கத்துறை விசாரணைக் காவலை மேலும் 6 நாட்கள் நீட்டித்து, நீதிபதி பங்கஜ் சர்மா உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, சில தினங்களுக்கு முன் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஷபீர் ஷா என்பவரை, டெல்லி கோர்ட் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.