நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க ரூ.201 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார அமைப்புகளில் 162 பிரத்தியேக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு ‘பி.எம். கேர்ஸ் பண்டு’ நிதியிலிருந்து ரூ.201.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் மோடி, கடந்த மார்ச் மாத இறுதியில், ‘பி.எம்., கேர்ஸ் பண்டு’ எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்சினைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் இது உருவாக்கப்பட்டது. இந்த நிதியத்திற்கு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்கள் என பல தரப்பினரும் நன்கொடைகளை வாரி வழங்கினர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார அமைப்புகளில் 162 பிரத்தியேக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு ‘பி.எம். கேர்ஸ் பண்டு’ நிதியிலிருந்து ரூ.201.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த தொகையில் ரூ.137.33 கோடி ஆலைகளை அமைப்பது மற்றும் ஆக்சிஜன் வினியோக திட்டங்களை செயல்படுத்துவதற்கு செலவிடப்படும் என்றும் மீதமுள்ள ரூ.64.25 கோடி ஆலைகளை பராமரிக்கும் வருடாந்திர ஒப்பந்தத்துக்கு செலவிடப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான மத்திய மருத்துவ வினியோக நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 154.19 மெட்ரிக் டன் திறன் கொண்ட 162 ஆலைகள் நிறுவப்படும் என்றும் இந்த ஆலைகளை நிறுவுவதற்கான அரசு ஆஸ்பத்திரிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com