அசாமில் கடும் வெள்ளம்: முதல் மந்திரியிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார் மோடி

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
அசாமில் கடும் வெள்ளம்: முதல் மந்திரியிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார் மோடி
Published on

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக ஜோர்கத், சோனித்பூர், கோல்பாரா மற்றும் துப்ரி மாவட்டங்களில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

மாநிலத்தில் உள்ள 35 மாவட்டங்களில் லக்கிம்பூர், கரிம்கஞ்ச், நல்பாரி, சிவசாகர், சிரங் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. 4.5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகினர்.

இந்நிலையில், பிரதமர் மோடி அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனாவாலை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அசாமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மாநில அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக முதல் மந்திரி சர்பானாந்தா கூறுகையில், ‘‘அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். வெள்ளம் தொடர்பான விவகாரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அனுப்பி வைத்துள்ளதாக பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com