

சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார சிறப்பு வழித்தடப் பிரச்சனை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீனாவின் நிலைப்பாடு என இந்தியா மற்றும் சீனாவின் உறவில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்தித்தார்.
சீனாவில் இருந்து சரக்குகளை அனுப்பி வைப்பதற்காக 50 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் செலவில் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சிறப்பு பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்து வருகிறது.
இந்த வழித்தடமானது, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீருக்குட்பட்ட கில்ஜித் மற்றும் பல்ட்டிஸ்தான் பகுதிகளை கடந்து செல்வதால் இந்த திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்று இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார வழித்தடம் அமைப்பது தொடர்பாக கடந்த மாதம் பீஜிங்கில் நடைபெற்ற 29 நாட்டு தலைவர்கள் சந்திப்பை இந்தியா நிராகரித்துவிட்ட பின்னர், இருநாட்டு தலைவர்களும் இன்று ஆலோசனை நடத்தியது, மிக முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது.