

வேலூர் பாகாயத்தில் நடந்த விளையாட்டு விழாவில் ‘ஹீலியம்’ கியாஸ் சிலிண்டர் வெடித்து பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் விளையாட்டு விழா பாகாயம் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதற்காக பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் விளையாட்டு மைதானத்தின் அரங்கம் மற்றும் அதன் அருகே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். விழாவில் பள்ளி நிர்வாகம் சார்பில் ஹீலியம் கியாஸ் அடைக்கப்பட்ட பலூன்கள் பறக்கவிட முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி ஹீலியம் கியாஸ் மூலம் பலூன் விற்பனை செய்யும் வேலூரை அடுத்த கருகம்புத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் அந்த மரத்தின் கீழ் பலூன்களுக்கு ஹீலியம் கியாசை நிரப்பிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மாலை சுமார் 4 மணி அளவில் விழா நடந்து கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இந்த சத்தம் சுற்று வட்டார பகுதியை அதிர வைத்தது. சிலிண்டர் வெடிக்கும்போது சிலிண்டரின் அடிப்பகுதி அருகில் இருந்த பிளாஸ்டிக் பேரல் மீது பட்டு அது சிதறியது. மேலும் அதிவேகத்தில் சிலிண்டரின் பாகம் மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது பட்டு 100 மீட்டர் தூரம் மேல்நோக்கி சென்று மைதானத்திற்குள் விழுந்தது. மற்றொரு பாகம் மைதானத்தை தாண்டி 100 மீட்டர் தூரத்தில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் போய் விழுந்தது.
இந்த விபத்தில் மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த வேலூர் சைதாப்பேட்டை தோப்பாசாமி கோவில் தெருவை சேர்ந்த வேல் என்பவரின் பிளஸ்-2 படிக்கும் மகன் ஜிதீஷ்குமாரின் (வயது 17) தலையில் விழுந்தது. இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே மாணவர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். மேலும் அவரின் தலையின் ஒரு பாகம் 100 மீட்டர் தூரம் மைதானத்திற்குள் கிடந்த சிலிண்டரின் பாகம் அருகே கிடந்தது.
இதில் படுகாயங்களுடன் சைதாப்பேட்டை கே.வி.எஸ். தெருவை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் நவீன் (17) உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நவீனை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜிதீஷ்குமார் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், தாசில்தார் பாலாஜி, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு வேலூர் மாவட்ட தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் விஜய் வந்து பார்வையிட்டு தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த போது பலூன் வியாபாரி கணபதி அங்கிருந்து மாயமாகி விட்டார். அவரை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிலிண்டர் வெடித்த போது கணபதி அருகில் இருந்திருக்கலாம். எனவே அவருக்கு காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அவர் சிகிச்சை பெற ஏதாவது மருத்துவமனைக்கு சென்றிருக்கிறாரா? அல்லது போலீசாருக்கு பயந்து தப்பியோடி விட்டாரா? என்பது குறித்து தெரியவில்லை. அவர் தப்பியோடும் போது அவரது மொபட்டை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி விட்டார். அவரை தேடி வருகிறோம் என்றனர்.
பல கனவுகளுடன் தொடங்கிய விழா இந்த சம்பவம் நிகழ்ந்த பின்னர் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சியில் பல மாணவர்கள் உறைந்தனர். இதனால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் வீட்டிற்கு பத்திரமாகஅனுப்பி வைத்தனர்.