

தேனி:
தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தேனி வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் கூறியதாவது:-
தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலை வழிபாட்டு தலமாக புனரமைப்பதா? அல்லது தமிழ் தொல்லியல் சான்றாக பாதுகாப்பதா? என்பதை பார்க்க வேண்டும்.
கேரள அரசுடன் ஒரு மாதத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி கண்ணகி கோவில், மதுரையில் கோவலன் இறந்ததாக கூறப்படும் இடம் போன்றவற்றை சிறப்பிக்கும் வகையில் சிலம்பு சுற்றுலா விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாது என்ற நிலை கண்டிப்பாக வராது. புதிய பாட திட்டத்தில் புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதோடு விளையாட்டு மற்றும் கலைகளுக்கும் சரியான அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ.40 கோடி நிதி தேவை. இதுவரை பல்கலைக் கழகத்துக்கு ரூ.38 கோடி கிடைத்துள்ளது. இதில், தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கி உள்ளது. அமெரிக்காவில் இருந்து பல்வேறு நபர்களால் ரூ.20 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ரூ.2 கோடி தேவை என்ற நிலையில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நிதி திரட்டி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி இதுவரை ரூ.70 லட்சம் திரட்டப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.1 கோடியே 30 லட்சம் தேவை. இந்த மாதம் இறுதிக்குள் நிதி முழுமையும் கொடுக்கப்படும். அங்கு தமிழர் ஒருவர் பேராசிரியராக நியமிக்கப்பட உள்ளார்.
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் அமைவதால் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும். வேலை வாய்ப்பு பெருகும்.
எனவே மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வர ஆர்வம் காட்டுகிறது. நியூட்ரினோ திட்டம் அமைய தமிழக அரசு உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் அமைய விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தேனி மாவட்டத்தில் மலையை குடைந்து அணுசோதனை நடத்தும் திட்டம் இப்பகுதிக்கு ஏற்றதாக அமையாது. மேலும் இத்திட்டத்தால் நீர் வளமும் பாதிக்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர்.
கூடங்குளம் அணு உலை, கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கும் செயலுக்கு மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதை போல நியூட்ரினோ ஆய்வு திட்டத்திலும் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.