சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - பினராயி விஜயன்

தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - பினராயி விஜயன்
Published on

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தீவிரமாக அமல்படுத்தியது.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், சபரிமலை பிரச்சினை குறித்தும் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டை அவமதித்த வழக்கை சந்திக்க நேரிடும்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்வியை சந்தித்ததை சிலர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது வேண்டுமானால் சிரிக்கலாம். அந்த சிரிப்பு தற்காலிகமானதே. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மீண்டு எழும்.

பெண்களுக்காகவும், மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து பாடுபடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com