பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

பாப்பாரப்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சாணார் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கணேசன் (வயது 32). திருமணம் ஆகவில்லை. இவர் பாப்பாரப்பட்டியில் தர்மபுரி சாலையில் சேட்டு என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கணேசன் பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசன் மர்மமான முறையில் இறந்தது குறித்து தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த நிலையில் கணேசன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், கொலையாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கணேசனின் சாவுக்கு காரணமான நபர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கணேசனின் மர்ம சாவு குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com