

மதுரை:
மதுரை புதுராமநாதபுரம் ரோடு ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் பாலன் (வயது 50). இவர் ஆயில் வியாபாரம் செய்து வருகிறார். தொழில் அதிபரான இவரது வீடு மற்றும் குடோன் அதே பகுதியில் உள்ளது.
இன்று அதிகாலை வீட்டு முன்பு திடீர் என்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலன் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது முன் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே தண்ணீரை எடுத்து வந்து பாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைத்தனர். வீட்டின் முன்பகுதியில் வெடித்த நிலையில் பாட்டில் கிடந்தது. இதனால் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.
இந்த தாக்குதலில் 3 பேர் ஈடுபட்டதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து பாலன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் நிரப்பப்பட்ட பாலட்டிலின் சிதறல்கள் மற்றும் சேதம் அடைந்த கார் ஆகியவற்றை பார்வையிட்டு பாலனிடம் விசாரித்தனர்.
தொழில் போட்டி காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா? அல்லது பாலனை மிரட்டுவதற்காக உறவினர்கள் இந்த தாக்குதலை நடத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த தாக்குதல் குறித்து 2 பேரை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனவே விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், அப்போது தாக்குதலுக்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தொழில் அதிபர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.