பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 2 பேர் கைது

கோவையில் அதிகாலையில் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு  - 2 பேர் கைது
Published on

கோவை:

கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கோவை காந்திபுரம் வி.கே.கே. மேனன் ரோட்டில் கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்திற்கு இன்று அதிகாலை 3.45மணிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் கையில் இரு குவார்ட்டர் பாட்டில்களும் ஒரு பீர் பாட்டிலையும் எடுத்து வந்து இருந்தனர்.

முதலில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி திரி வைத்து அதனை பற்ற வைத்து பா.ஜனதா அலுவலகம் மீது வீசினார்கள். ஆனால் அந்த குண்டு அலுவலக போர்டு மீது பட்டு கீழே விழுந்து வெடித்தது. இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த குவார்ட்டர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து மீண்டும் பா.ஜனதா அலுவலகம் மீது வீசினார்கள்.

அந்த குண்டும் பா.ஜனதா அலுவலகத்தின் போர்டில் பட்டு வெடித்தது. இதில் அலுவலகத்தின் போர்டு அருகே உள்ள சுவற்றில் சற்று தீப்பிடித்தது.

நேற்று இரவு 2 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். முதல் குண்டு வீசிய உடன் சத்தம் கேட்டு போலீசாரும், அலுவலக ஊழியரும் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் 2-வது குண்டையும் வீசி விட்டனர். போலீசாரை பார்த்ததும் மர்ம நபர்கள் 3 பேரும் தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் உதவி போலீஸ் கமி‌ஷனர்கள் சுரேஷ், ரமேஷ் கிருஷ்ணா மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும், வெடி குண்டு நிபுணர்களும் வந்து அங்கு சிதறி கிடந்த பெட்ரோல் குண்டின் தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சியை அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இருந்து கண்காணிப்பது வழக்கம்.

இந்த கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 3.45 மணிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்ததும் அவர்கள் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மறைவில் இருந்து பெட்ரோல் குண்டு வீசுவதும் பதிவாகி உள்ளது.

அதில் 2 பேர் உருவம் தெளிவாக பதிவாகி உள்ளது. அதனை வைத்து குண்டு வீசியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து பா.ஜனதா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.

பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக துணை கமி‌ஷனர் பெருமாள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

பா.ஜனதா அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதில் பதிவாகி இருந்த வாலிபர் கோவை கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பாலன் (35) என்பது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் கவுண்டம் பாளையம் விரைந்து சென்று பாலனை மடக்கி பிடித்தனர். அவர் பா.ஜனதா அலுவலகம் மீது குண்டு வீசியதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். கைதான பாலன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர் கொடுத்த தகவலின்பேரில் பெரியார் திராவிட கழக மாநகர அமைப்பாளர் ஜீவானந்தம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களுடன் சேர்ந்து குண்டு வீசிய மேலும் ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற மேலும் 2 பேர் என 3 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com