பரமக்குடியில் முக்குலத்தேவர் புலிப்படை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

பரமக்குடியில் இன்று காலை முக்குலத்தேவர் புலிப்படை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டுவீச்சில் சேதமடைந்த கார்.
பெட்ரோல் குண்டுவீச்சில் சேதமடைந்த கார்.
Published on

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது42). இவர் முக்குலத்தேவர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவி அதன் பொதுச்செயலாளராக உள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு வரை கருணாஸ் எம்.எல்.ஏ.வின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த பாண்டித்துரை கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து விலகி புதிய அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகிறார். இவரது வீடு பரமக்குடி வேந்தோணி சாலையில் உள்ளது.

நேற்று பாண்டித்துரை வேலை வி‌ஷயமாக மதுரை சென்றார். இதனால் இரவில் அவர் வீட்டில் இல்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அந்த பகுதிக்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பாண்டித்துரை வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். ஆனால் அந்த குண்டுகள் வீட்டின் கேட் மீது பட்டு வெளியே விழுந்து வெடித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் 2 பேரும் அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வேன் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.

குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்த போதுதான் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவரம் தெரியவந்தது.

இதுகுறித்து வெளியூர் சென்றிருந்த பாண்டித்துரைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து பரமக்குடி போலீசில் புகார் கொடுத்தார்.

துணை சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பெட்ரோல் குண்டு வீசியது யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும், வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு கைகளில் 2 பாட்டில்களை கொண்டு வந்து பாண்டித்துரை வீட்டின் மீது வீசுவதும் தெரியவந்தது.

பெட்ரோல் குண்டு வீட்டுக்குள் விழாமல் கேட்டுக்கு வெளியே விழுந்து வெடித்ததால் ஆத்திரத்தில் சாலையில் நின்ற வாகனங்களை சேதப்படுத்தி விட்டு தப்பி செல்வதும் கேமிராவில் பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் அவர்கள் யார்? எதற்காக பெட்ரோல் குண்டு வீசினர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாண்டித்துரை கூறியதாவது:-

எனக்கு உறவினர்கள் பகையோ, தொழில் பகையோ கிடையாது. அரசியல் ரீதியான பகைதான் உள்ளது. அரசியலில் எனக்கு பிடிக்காதவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com