

மும்பை:
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பத்மாவத் படம் வெளியான தியேட்டரின் வெளியே பெட்ரோல் குண்டு விசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘பத்மாவத்’.
குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தீவைப்பு, தியேட்டர்கள் சூறை, வாகனங்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்ப்பு இருப்பதால், சென்னையிலும் இந்த படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் அமைந்துள்ள பானுசாகர் தியேட்டரில் பத்மாவத் திரைப்படம் வெளியானது.
அந்த தியேட்டரில் நேற்று மாலை பத்மாவத் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் தங்கள் கைகளில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டரின் வெளிப்புறத்தில் விசியது.
இதைக்கண்ட தியேட்டர் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு சென்று பெட்ரோல் குண்டை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Padmaavat #Maharashtra #tamilnews