

புதுடெல்லி:
2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் அதிகரிக்கும் எனவும், அது விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ.71.18, ரூ.61.74-ஆகவும் நேற்று இருந்தது.
2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, தற்போதுதான் பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு அதிகரித்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளில் வித்தியாசம் காணப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன.
பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், டெல்லியில்தான் பெட்ரோல், டீசல் மீதான விலை குறைவாகும். டெல்லியைக் காட்டிலும் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பிற பெரு நகரங்களில் பெட்ரோல், டீசல் மீதான விலை அதிகமாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 குறைத்தது.
இதையடுத்து, பெட்ரோல் விலை ரூ.68.38-ஆகவும், டீசல் விலை ரூ.56.89-ஆகவும் குறைந்தது. எனினும், அதன்பிறகும் பெட்ரோலியப் பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.
டீசல் விலை உயர்வதால் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் உயரத்தொடங்கும். இது, சரக்குகளின் விலை உயர்வுக்கு வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Petrol #Diesel #tamilnews