

புதுடெல்லி:
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக நதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் கைது செய்யப்பட்டு 1949-ம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர். காந்தி கொல்லப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த பங்கஜ் பட்னிஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
காந்தியின் கொலையில் 3-வது நபர் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு இருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இதில் கோர்ட்டுக்கு உதவும் ‘அமிகஸ் கியூரி’யாக மூத்த வக்கீல் அம்ரேந்தர் சரணை நியமித்தது.
அவர் இவ்வழக்கு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், காந்தி கொலை வழக்கில் குற்றவாளி ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுவிட்டதால் மறுவிசாரணை தேவையில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான நிலைப்பாடு மற்றும் ஆதாரங்கள் குறித்து மனுதாரரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அமிகஸ் கியூரி அம்ரேந்தர் சரணின் அறிக்கைக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டும் தான் நடக்கும், வழக்கு சம்பந்தப்பட்ட நபரின் சொந்த நிலைப்பாட்டின் படி நடக்காது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.
இதையடுத்து, அம்ரேந்தர் சரணின் அறிக்கைக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்கும்படி மனுதாரர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். #TamilNews