

மதுரை:
சமூக வலைதளங்களில் சமீபத்தில் டிரெண்டாகி உள்ள வீர தீர செயல் இது. ...
நெல்லை மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 68). அவருடைய மனைவி செந்தாமரை (65). இவர்கள் கடந்த 11-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த போது 2 முகமூடி கொள்ளையர்கள் அரிவாளுடன் பாய்ந்து வந்து தாக்கினர். அந்த தம்பதியை வெட்ட வந்தபோது கொள்ளையர்களை கையில் கிடைத்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் எடுத்து வீசி தாக்கினர். இதனால் நிலை குலைந்த முகமூடி கொள்ளையர்கள் தங்கள் கைகளில் கிடைத்த 4 பவுன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பாப்புலராகி விட்டது.
முதிர் வயதான இந்த தம்பதியின் அசாத்திய செயல்களை நடிகர் அமிதாப் பச்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் வரை டுவிட்டரில் பாராட்டும் அளவிற்கு பிரபலம் ஆகி உள்ளது.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அதே மாதிரியான ஒரு சம்பவம் மதுரையிலும் அரங்கேறி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் அசோக்கின் நண்பர்கள் 8 பேர் முகமூடி அணிந்தபடி பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முத்துக்குமாரை தேடி அவர் வேலை பார்க்கும் அப்பள கம்பெனிக்கு சென்றனர்.
இந்த கும்பலை கண்டதும் அங்கிருந்த முத்துக்குமார் தப்பி ஓடிவிட்டார். ஆனால் அப்பள கம்பெனி உரிமையாளர் செந்தில் இந்த கும்பலிடம் விசாரித்த போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அந்த முகமூடி கும்பல் செந்திலை பட்டாக்கத்தியால் தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு செந்திலின் மனைவி தமிழ்செல்வி ஓடி வந்தார். தனது கணவரை பட்டாக்கத்தியால் கும்பல் தாக்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக எதிர் தாக்குதலில் ஈடுபட்டார். அருகே கிடந்த உருட்டுக் கட்டையால் முகமூடி கும்பலை தாக்கினார்.
அப்போது அந்த கும்பலில் உள்ள ஒருவன் தமிழ்செல்வியின் இடது கையில் பட்டாக்கத்தியால் வெட்டினான். இதில் அவரது கை விரல்கள் துண்டானது. ரத்தம் ஒருபுறம் வடிந்தாலும், மனந்தளராமல் தொடர்ந்து முகமூடி கும்பலை தாக்கினார் தமிழ்செல்வி.
கணவரும், மனைவியும் ரவுடிகளுடன் சண்டை போடுவதை அருகே இருந்து பார்த்த அவர்களது வளர்ப்பு நாய் ஆவேசமாக குரைத்தபடி அந்த கும்பல் மீது பாய்ந்தது. அப்போது நாய் என்று கூட பார்க்காமல் அந்த கும்பல் பட்டாக்கத்தியால் வெட்டியது. வயிற்றுப் பகுதியில் வெட்டு விழுந்ததால் சிறிது நேரத்தில் நாய் இறந்து விட்டது. உடனே அக்கம், பக்கத்தினரும் திரண்டு வர, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெட்டுக்காயங்களுடன் இருந்த செந்தில், அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். தாக்குதலில் ஈடுபட்டதாக ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த விஜய் (22), ஹரி (19), பிரவீன் பாலா (18), சிவா (19), சாகிர் உசேன் (19) மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். தலைமறைவான விக்னேஷ் என்பவரை தேடி வருகிறார்கள்.
மதுரை பகுதியிலும் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் மீது இரும்பு கரம் கொண்டு போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.