

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 138 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 22-வது சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஷேன் மார்ஷ் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் 7 பந்து வீச்சாளர்கள் பந்து வீசி பார்த்தார்கள். எந்த பலனும் இல்லை. இருவரும் ரன்கள் குவித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300, 400 என ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
மிட்செல் மார்ஷ் தனது சொந்த மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். ஸ்மித்தின் இரட்டை சதத்தாலும், மிட்செல் மார்ஷின் சதத்தாலும் 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 229 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 181 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.