பேரணாம்பட்டு: மந்திரவாதி வீட்டில் பதுக்கிய ஐம்பொன் சிலை உள்பட 12 சிலைகள் பறிமுதல்

பேரணாம்பட்டு அருகே மந்திரவாதி குப்புசாமி என்பவரது வீட்டில் ஐம்பொன் சிலை உள்பட 12 சிலைகளை நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மந்திரவாதி வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த சிலைகள்.
மந்திரவாதி வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த சிலைகள்.
Published on

பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் என்கிற குப்புசாமி (வயது 50). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

அதன்பிறகு, கட்டிட வேலைக்கு செல்வதாக கூறி குப்புசாமி பெங்களூருக்கு சென்றார். அங்கு சாமியாராக மாறிய அவர், மாந்திரீக தொழிலுக்கு மாறினார். இதன் மூலம் அவருக்கு அதிக பணம் கிடைத்தது.

குறிப்பாக, குடும்ப பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மாந்திரீக செய்வதன் மூலம் அவருக்கு பணம் கொட்டியது. சில நாட்கள் கழித்து, குப்புசாமி சொந்த ஊரான பத்தலப்பல்லிக்கு வந்தார்.

உறவினர்கள், நண்பர்கள் ஆச்சியர்த்துடன் அவரை பார்த்தனர். கூலி வேலைக்கு சென்றவர், எப்படி சாமியாராக மாறினார் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.

இதையடுத்து, ஊர் திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நன்கொடையாக பணத்தை அள்ளி வீசினார். இதன் மூலம் அவர் மீது எழுந்த சர்ச்சை கேள்விகள் தவிடு பொடியானது.

மீண்டும் பெங்களூருக்கு சென்ற சாமியார் குப்புசாமி, அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து சென்றார். அப்படி வரும் சமயத்தில் இங்கேயும் மாந்திரீக பூஜைகளை செய்து பணம் சம்பாதித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் சாமியார் குப்புசாமி சொந்த ஊருக்கு வந்து நிரந்தரமாக தங்கி விட்டார். பெங்களூருவில் இருந்தும், அவரை தேடி பலர் வந்து சென்றனர். நள்ளிரவில் சந்தேகித்திற்கிடமான நபர்களும் வந்துள்ளனர்.

குப்புசாமியின் மாந்திரீகம் மூலம் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று நினைத்து சென்ற சிலர், அவரது வீட்டில் ஏராளமான சாமி சிலைகள் இருப்பதை பார்த்தனர்.

இந்த தகவல் காட்டு தீ போல் பரவியது. இதுகுறித்து, எஸ்.பி. பகலவனுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி. உத்தரவின் பேரில், நுண்ணறவு பிரிவு போலீசார் ஒரு மாதமாக சாதாரண உடையில் சாமியார் குப்புசாமியை கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து, இன்று அதிகாலை குப்புசாமியின் வீட்டிற்குள், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், நுண்ணறிவு பிரிவு ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ் ஆகியோர் அதிரடியாக நுழைந்தனர்.

வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர். மாடி அறையில், 6 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை சிக்கியது. மேலும் கீழ் தளத்தில் சிவலிங்கம், சிவன், பார்வதி, ஜடாமுடி கோலத்தில் சிவன் ஆகிய ஐம்பொன் சிலைகள் மற்றும் சிம்மவாகனம், பலிபீடம், சங்கு, யாழி என மொத்தம் 12 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், சாமியார் குப்புசாமியை, அவருடைய வீட்டில் வைத்து தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், சாமியார் குப்புசாமி பெங்களூருவில் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. கடத்தப்படும் சிலைகள், இவருடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர், சாமியார் போல் வேடமணிந்து மாந்திரீக பூஜை செய்வதாக ஊரை ஏமாற்றி கடத்தல் சிலைகளை தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இவரிடம் இருந்து சிலைகள் வெளியில் விற்கப்பட்டுள்ளது.

கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில், பெங்களூருவில் பெரிய வணிக வளாகத்தை சாமியார் குப்புசாமி கட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com