118 பட்டாசு கடைகளுக்கு அனுமதி - ஈரோடு மாவட்ட தீயணைப்பு அதிகாரி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 118 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி தெரிவித்தார்
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஈரோடு:

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 238 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஏராளமானோர் பட்டாசு கடைகளை திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

அனுமதி கேட்டு உள்ள இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? பட்டாசு கடைகள் தொடங்குவதற்கு உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 118 பட்டாசு கடைகள் அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி புளுகாண்டி கூறும்போது, ‘பட்டாசு கடைகள் தொடங்குவதற்கு உரிய நிபந்தனை, விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான இடம் என்று ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 118 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அனுமதி பெற்று பட்டாசு கடை நடத்துபவர்கள் அதற்கான விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com