

பெரியபாளையம்:
எல்லாபுரம் ஒன்றியம் நெய்வேலி ஊராட்சியில் உள்ள மேட்டுத் தெரு ஒன்றிய சாலை, அம்பேத்கர் நகர், பிராமணர் தெரு, வன்னியர் தெரு, தலையாரி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படவில்லை.
இதனால் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வந்தனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.
சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் முனுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி, பாலாஜி, கங்காதரன், வட்டக்குழு உறுப்பினர்கள் கன்னியப்பன், அருள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.