

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 38), தொழிலாளி. நேற்று இவர் வாலிகண்டபுரத்திற்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் இன்று காலை வாலிகண்டபுரம்- கீழப்பூலியூர் கிராம சாலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மங்களமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது சந்திரகுமார் என்பது தெரியவந்தது. அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரகுமார் தலையில் ஏற்பட்ட காயமானது ஏதோ உருட்டு கட்டையால் தாக்கியதில் ஏற்பட்ட காயம் போல் உள்ளது. இதனால் மர்மநபர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆனால் நடந்து செல்லும் போது வாகனம் ஏதும் மோதியதில் அவர் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.