பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை

தகராறை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரை சேர்ந்தவர் தர்மதுரை. அதே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 21). கட்டிட தொழிலாளி. நேற்று தர்மதுரை தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் அருகே பாலக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கோபிநாத் அவரது நண்பர்கள் கார்த்திக்கேயன், ராஜாராமன் ஆகியோருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார்.

அப்போது தர்மதுரை மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் 3 பேரும் சென்றனர். இதையடுத்து தர்மதுரை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்றிரவு கோபிநாத், கார்த்திக்கேயன், ராஜாராமன் ஆகியோர் மதுபோதையில் தர்மதுரை வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாஸ்கர் (19), பிரகாஷ் (23), ராஜசேகர் ஆகியோர் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்களிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் , கார்த்திக் கேயன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஸ்கர் மற்றும் பிரகாசை சரமாரி குத்தினர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் சென்று பாஸ்கர் மற்றும் பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாஸ்கர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்குப்பதிவு செய்து கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்கேயன், ராஜாராமன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com