நீர்தேக்கத் தொட்டியில் வலி நிவாரண மருந்து பாட்டிலால் அடைப்பு - தண்ணீர் வராததால் பொதுமக்கள் தவிப்பு

தஞ்சை அருகே நீர்தேக்கத் தொட்டியில் வலி நிவாரண மருந்து பாட்டிலால் அடைப்பு ஏற்பட்டதால் 3 மாதங்களாக தண்ணீர் வராமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நீர்தேக்கத் தொட்டியில் வலி நிவாரண மருந்து பாட்டிலால் அடைப்பு - தண்ணீர் வராததால் பொதுமக்கள் தவிப்பு
Published on

தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே திருவேதிகுடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவில் காளியம்மன் கோவில் தெரு, மாதாகோவில் தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு என்று 4 தெருக்கள் பிரிந்து உள்ளன.

இந்த பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்க ஆதிதிராவிடர் தெருவில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குடிநீர், குழாய்களுக்கு வந்து சேரும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதியினர் நடந்தே சென்று நீர்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தெருக்களில் உள்ள குழாய்களில் சிறிதளவே தண்ணீர் வந்தது. அந்த தண்ணீரை சிலர் பிடித்து குடித்தனர்.

இதனால் அவர்களுக்கு தலை சுற்று, மயக்கம் போன்ற உடல் நலகோளாறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 3 மாதங்களாக தண்ணீரும் வரவில்லை. இப்போது வந்த தண்ணீரையும் குடித்தால் உடல் நல கோளாறு ஏற்படுகிறது என்று சந்தேகமடைந்த அப்பகுதியினர் நீர்தேக்க தொட்டியை சென்று பார்த்தனர்.

அப்போது நீர்தேக்க தொட்டியில் இருந்து தெருக்களுக்கு செல்வதற்காக தண்ணீர் குழாய் போடப்பட்டுள்ளது. அந்த குழாயின் வளைவில் தலைவலிக்கு பயன்படுத்தும் மருந்து டப்பா மற்றும் இரும்பு டப்பா போன்றவை கொண்டு தண்ணீர் செல்ல கூடாது என்பதற்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் நேற்று கண்டியூர் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த முயற்சித்தனர். இது குறித்து தகவலறிந்த தஞ்சை மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி மற்றும் அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட முயன்ற அப்பகுதியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின் குழாயில் அடைத்து வைக்கப்பட்ட அடைப்புகளை அகற்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com