

நாடு முழுவதும் அமலாகி உள்ள ஜி.எஸ்.டி. வரியால் பொதுமக்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டல் உணவுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழக அரசும் கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் பெரிய மால்களில் செயல்படும் சொகுசு தியேட்டர்களுக்கே வரவேற்பு அதிகமாகும். விலை 100 ரூபாயை தாண்டி இருந்தாலும் மால் தியேட்டர்களில் படம் பார்ப்பதையே பொதுமக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
ராயப்பேட்டையில் ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’, அமிஞ்சிகரையில் ‘ஸ்கைவாக்‘, புரசைவாக்கத்தில் ‘அபிராமி மால்’, வேளச்சேரியில் ‘பீனிக்ஸ் மால்’ பெரம்பூரில் ‘எஸ்-2’ வணிக வளாகம் என சென்னையில் ஏராளமான மால் தியேட்டர்கள் உள்ளன. அங்கு 4 அல்லது 5 தியேட்டர்கள் செயல்படும். அதோடு உணவகங்கள், ஆடையகங்கள், அழகு நிலையங்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு உலகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றிருக்கும்.
இதுபோன்ற மால் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்பவர்கள் முன் கூட்டியே அங்கு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். அதேபோல சினிமா பார்த்து முடிந்த பின்னரும் மால்களிலேயே நீண்ட நேரம் இருந்து விட்டு வீட்டுக்கு திரும்புபவர்களும் இருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் நேற்று சென்னையில் உள்ள அனைத்து மால்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. காணப்பட்டன. மால்களில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாக காணப்பட்டனர். இன்று 2-வது நாளாகவும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மால்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.