

தஞ்சை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி சார்பில் எண்ணை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் குழாய்கள் உடைந்து எண்ணை கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து போராடி வரும் அப்பகுதி மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதோடு, அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக போராடிய பேராசிரியர் ஜெயராமன், பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஏற்கத்தக்கதல்ல. இதனை கண்டித்து தான் இந்த கூட்டம் நடக்கிறது. கதிராமங்கலம் பகுதி மக்களின் குறைகளுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். அமைச்சர்கள் நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற 9-ந்தேதிக்குள் இப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் 10-ந்தேதி அனைத்துக்கட்சி மாநில தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கதிராமங்கலம் சென்று மாபெரும் போராட்டம் நடத்துவோம்.