

மதுரை:
மதுரை பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). இவர் வீட்டில் இருந்தபடியே இரு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் வேலையை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோகரன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்பதை அறிய கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரிக்கு அவரை மாற்றம் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டு வார்டில் மனோகரன் மட்டும் தனியாக இருந்தார்.
நேற்று காலை அவரது மனைவி ஆஸ்பத்திரிக்கு வந்தபோது மனோகரனை காணவில்லை. உடனே அவர் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் தெரிவித்தார். அவர்கள் ஒவ்வொரு வார்டாக ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் அவரை தேடி பார்த்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு பின்னால் தலையில் ரத்த காயத்துடன் மனோகரன் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் மனோகரன் ஆஸ்பத்திரியின் 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மனோகரனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்தார். அவரது தற்கொலைக்கு கடன் தொல்லை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.