பெரம்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள்

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளதால் கூடுதல் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள்
Published on

சென்னை:

ரெயில்களில் முன்பதிவு செய்வதற்கு ஆன்லைன் வசதி செய்யப்பட்ட பிறகு முன்பதிவு மையங்களில் கூட்டம் குறைந்துவிட்டது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற பெரிய ரெயில் நிலையங்களில் கூட முன்பதிவு மையங்களில் கூட்டம் இருப்பது இல்லை. 10, 12 கவுண்டர்கள் என செயல்பட்ட இந்த மையங்கள் பயணிகள் குறைவால் படிப்படியாக கவுண்டர்களை இழுத்து மூடியது.

பெரும்பாலானவர்கள் இணைய தளம் வழியாக வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி-யின் ஏஜென்சிகள் மூலமாகவோ முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு டிக்கெட் மட்டுமின்றி தக்கல் டிக்கெட்டுகளுக்கும் கூட கவுண்டர்களுக்கு அதிகளவில் யாரும் வருவதில்லை. தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகை கால முன்பதிவுகளுக்கு கூட கவுண்டர்களை நாடாமல் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறுகின்றனர்.

வரிசையில் காத்து நின்று டிக்கெட் பெற்ற காலம் மாறிவிட்டது. இப்போது எல்லாமே, செல்போன், லேப்டாப் வழியாக இருந்த இடத்திலேயே வேலையை முடித்து விடுகின்றனர்.

இதனால் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் முன்பதிவு மைய ஊழியர்களை குறைத்து விட்டனர். காலி பணி இடங்களும் நிரப்புவது இல்லை. சென்ட்ரல், எழும்பூர், அண்ணாநகர், தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, அடையார் போன்ற இடங்களில் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் வட சென்னை பகுதியில் பெரம்பூர் ரெயில் நிலையம் மட்டுமே உள்ளது.

இதனால் அங்கு எப்போது சென்றாலும் முன்பதிவு செய்ய மக்கள் கூட்டம் காத்து இருக்கிறது. காலை 8 மணி, பகல் 12 மணி, மாலை 4 மணி என எந்த நேரம் சென்றாலும் பயணிகள் காத்து நிற்கிறார்கள். வட சென்னை பகுதி மக்களுக்கு முன்பதிவு செய்ய இந்த ஒரு இடம் மட்டுமே இருப்பதால் பல மணி நேரம் காத்திருந்துதான் முன்பதிவு செய்ய முடியும்.

அங்கு 2 கவுண்டரில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. 5-க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் இருந்த போதிலும் ஊழியர்கள் குறைக்கப்பட்டதால் இருவர் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களும் செல்போனில் பேசிக் கொண்டும், தாங்கள் சொந்த குடும்ப விவரங்களை பகிர்ந்து கொண்டும் அலட்சியமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

வரிசையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருந்தாலும் பொறுப்பு இல்லாமல் மெத்தனமாக பணியாற்றும் போக்கை பார்த்து பயணிகள் எரிச்சல் அடைகிறார்கள். ஒருவர் டிக்கெட் எடுத்து செல்ல ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது.

அவசரமான இந்த உலகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 2 மணி நேரம் ஒதுக்குவதால் மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. அதனால் தேவை அறிந்து பயணிகள் நேரத்தை வீணடிக்காமல் இருக்க மேலும் 2 கவுண்டர்களை திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

ரெயில்வே துறை வணிக நோக்கத்தோடு மட்டும் பார்க்காமல் மக்கள் நலனிலும் அக்கறை செலுத்தி உடனடியாக கூடுதல் கவுண்டர்களை திறந்து பயணிகள் எளிதாக டிக்கெட் எடுத்து செல்ல உரிய நடவடிக்கையை தெற்கு ரெயில்வே வணிகத் துறை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com