பேச்சுவார்த்தையில் இழுபறி: சென்னை, புறநகர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. #busstrike
பேச்சுவார்த்தையில் இழுபறி: சென்னை, புறநகர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி
Published on

சென்னை:

13-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் இழுபறி நீடித்து வருகிறது.

இதையடுத்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை புறநகரின் சில இடங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகம் முடிந்து வீடு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

முன்னறிவிப்பின்றி பேருந்துகளை நிறுத்திய போக்குவரத்து தொழிலாளர்களால் அலுவலகம் சென்றோர் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #busstrike #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com