

108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்.
இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந் தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனமும், விஸ்வரூப தரிசனமும், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏகாதசிக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. சொர்க்கவாசல் வழியே பெருமாளை தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய காத்து நின்றனர். அதிகாலை 2.20 மணிக்கு ரூ.300 டிக்கெட் வைத்திருப்பவர்களும் கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் பார்த்தசாரதி பெருமாள் தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்தங்கி ரத்தின அங்கி அலங்காரத்துடன் மகா மண்டபத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளினார்.
சரியாக காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார்.
அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். நேற்று நள்ளிரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
இன்று (சனிக்கிழமை) முதல் ஜனவரி 6-ந் தேதி வரை மாலை 6 மணிக்கும், 7-ந் தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள், அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதுடன், கோவில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு கீதை சுலோகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஷ்ப அங்கி சேவையில் பக்தர்களுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியே சென்றனர். இதையொட்டி பூமார் குழுவினரின் இன்னிசை, பஜனை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தது. நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்திருந்தார்.
இதேபோல், தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். லட்டு, குங்குமம், கற்கண்டு மற்றும் ஆன்மிக புத்தகம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் கேசவபெருமாள் கோவில், கொடுங்கையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட சென்னையில் உள்ள பல பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அலைமோதியது.