மனைவி தூக்கில் தொங்கியதால் குழந்தையை கொன்று கணவன் தற்கொலை

கடலூர் மாவட்டத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, 2½ வயது குழந்தையை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ParentsSuicide #ChildMurder
மனைவி தூக்கில் தொங்கியதால் குழந்தையை கொன்று கணவன் தற்கொலை
Published on

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைசெருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (25). இவர்களுக்கு பிரதிஷா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது. பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.

பிரகாசுக்கும் அவரது மனைவி உஷாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ராஜ்கோட்டில் இருந்து சொந்த கிராமமான இடைசெருவாய்க்கு வந்தார். நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து இரவில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் உஷா திடீரென கண்விழித்தார். அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறதே என நினைத்து அழுதார். பின்னர் உஷா வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

திடீரென்று எழுந்த பிரகாஷ், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு உஷா தற்கொலை செய்து கொண்டாரே என எண்ணி கதறி அழுதார். பின்னர் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி முதலில் தூங்கிக்கொண்டிருந்த மகள் பிரதிஷாவின் கையில் கத்தியால் அறுத்தார். ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை பிரதிஷா பரிதாபமாக இறந்தது. பின்னர் தனது கையையும் பிரகாஷ் கத்தியால் அறுத்தார். அவரது கையில் இருந்து ரத்தம் ஆறாக ஓடியது. சிறிது நேரத்தில் பிரகாசும் இறந்தார்.

இன்று காலை வெகு நேரமாகியும் பிரகாசின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உஷா தூக்கில் தொங்கியவாறும், பிரகாஷ், குழந்தை பிரதிஷா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திட்டக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து பிரகாஷ், உஷா மற்றும் குழந்தை பிரதிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் எதற்காக குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசாருக்கு முழுமையாக தகவல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #ParentsSuicide #ChildMurder

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com