

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி.
இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இயக்குனராக உள்ளார். இவரது மனைவி கோமதி நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு ரங்கீஷ் (வயது 18), ஹரீஷ் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் ரங்கீஷ் முதலாமாண்டு பி.இ. என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஹரீஷ் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஹரீஷ் கடந்த 25 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
உடனடியாக அவரை பரமத்திவேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அவருக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்ததால் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று இரவு ஹரீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லியம்பாளையத்தில் சுகாதார சீர் கேடு அதிகமாக இருப்பதால், இங்கு கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. எனவே, டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் இந்த பகுதியில் வேகமாக பரவி வருகிறது.
இதனால்தான் மாணவன் ஹரீஷ் பலியானார். மேலும் டெங்கு பரவாமல் தடுக்க உடனடியாக சுகாதார பணிகளை அதிகாரிகள் ஈடுபட வேண்டும். பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.