பரமத்திவேலூர் அருகே மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

பரமத்திவேலூர் அருகே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர் அருகே மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 50). இவரது மனைவி சம்பூர்ணம் (45). இவர்களது மகள் காயத்திரி(18).

இவர் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று காயத்திரியின் தாய் சம்பூர்ணம் வெளியூரில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். இரவு 8 மணி அளவில் தந்தை சேகர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சமையல் எதுவும் செய்யவில்லை என தெரிகிறது.

அப்போது அறையில் தூங்கிக் கொண்டிருந்த காயத்திரியிடம் அம்மா வெளியூர் சென்றுள்ளார். இது வரை ஏன்? சமையல் செய்யவில்லை என கூறி சேகர் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த காயத்திரி இரவு 11 மணி அளவில் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். இந்த வி‌ஷம் மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என கூறி கதறி அழுதார்.

உடனடியாக சேகர் அங்கு ஓடி வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகளை மீட்டு, ஜேடர்பாளையம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது காயத்திரி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து சேகர் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான முழு காரணங்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

தேர்வு முடிக்காக வீட்டில் காத்திருந்த காயத்திரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com