பாபநாசம் அணை நீர்மட்டம் 30 அடியாக உயர்வு

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 30.55 அடியாக உயர்ந்துள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 30 அடியாக உயர்வு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளிலும், பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாபநாசம் அணை நீர்மட்டம் 17 அடிக்கும் கீழே சென்று வறட்சியின் பிடியில் சிக்கியது.

தற்போது பாபநாசம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் நீர்மட்டம் தினசரி உயர்ந்து வருகிறது. நேற்று பாபநாசம் அணையின் நீர்மட்டம் 28.60 அடியாக இருந்தது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 30.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 845.27 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் குடிநீருக்காக வினாடிக்கு 497.25 கன அடி தண்ணீர் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் படிப் படியாக உயர்ந்து இன்று 32.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு சுமார் 3 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 27.39 அடியாக உள்ளது. அங்கு பராமரிப்பு பணி நடந்து வருவதால் நீர்மட்டத்தை உயர்த்தாமல் உள்ளனர்.

இதுபோல ராமநதி, குண்டாறு, நம்பியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மழை இல்லை. ஆனால் பல இடங்களில் கருமேக கூட்டம் கூடி கலைந்தது. தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து சராசரி அளவு இந்த ஆண்டு பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் ஆவலோடு மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com