

புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் அமைப்புகளின் தேர்தல்கள் தேசிய அளவில் கவனம் ஈர்ப்பவை. அரசியல் கட்சிகள் தங்களுடைய செல்வாக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இவ்வகை தேர்தல்கள் மூலமாக கண்டறிந்து கொள்வது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலையில் இருந்த ஏ.பி.வி.பி ( ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பு) மதிய நேரத்தில் பின்னடைவை சந்தித்தது.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வென்றது. செயலாளர் பதவியை மட்டும் ஏ.பி.வி.பி வென்றுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறனர்.
இரு தினங்களுக்கு முன்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஒட்டு மொத்த இடங்களையும் இடதுசாரி மானவர்கள் கூட்டமைப்பு வென்றது குறிப்பிடத்தக்கது.