

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தனது பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ குர்மீத் ராம் ரஹிம் சிங் கோர்ட்டுக்கு வந்தார்.
இதற்கிடையே, தனக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டால் அமைதி காக்க வேண்டும் என குர்மீத் ராம் ரஹிம் சிங் இன்று வீடியோ மூலம் தனது அபிமானிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அவரது தலைமையில் 500-க்கும் அதிகமானவர்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.
இதையடுத்து, அமைதியாக இருந்த அவரது ஆதரவாளர்கள் தீர்ப்புக்கு பிறகு கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று மாநில உளவுத்துறை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கலவரச் சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பு முகமைகள் தேவைக்கேற்ப ஆயுதங்களை பயன்படுத்தி பதற்றத்தை தணிக்கலாம் என்று பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் இன்று காலை அனுமதி அளித்தது. அதேவேளையில், இந்த தீர்ப்பு தொடர்பாக வன்முறையை தூண்டி விடாமல் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்வருமாறு மக்களுக்கு அரியானா முதல் மந்திரி கத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் தனது இருக்கைக்கு வந்த நீதிபதி இவ்வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்-கை குற்றவாளி என உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். 14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு வரும் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.