பனாமா கேட் வழக்கு விசாரணை முடிவடைந்தது: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது உறவினர்கள் மீதான பனாமா கேட் ஊழல் வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளது.
பனாமா கேட் வழக்கு விசாரணை முடிவடைந்தது: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on

இஸ்லாமாபாத்: 

நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.

இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் என அனைவரிடமும் விசாரணை முடிந்தது.

இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பின் மகன் ஹுசைன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானது என தெரியவரும் பட்சத்தில் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்று இறுதிக்கட்ட வாதம் நடைபெற்றது. அத்துடன் விசாரணையும் முடிவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக இவ்வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com