

ராமேசுவரம்:
ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கடலோர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வப்போது ரோந்து பணியிலும் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் 4 பிளாஸ்டிக் பண்டல்கள் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அந்த பிளாஸ்டிக் மூடைகளில் வெடிமருந்துக்கு பயன்படுத்தப்படும் பொட்டாசியம் சல்பேட் பவுடர் இருப்பது தெரியவந்தது.
அந்த வெடிமருந்து கால் கிலோ பொட்டலங்களாக மொத்தம் 137 கிலோ இருந்தது. இதனை பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தலாம் என தெரிகிறது.
இந்தவெடிமருந்தை யாராவது இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றார்களா? அல்லது இலங்கைக்கு திருட்டுத்தனமாக கொண்டு செல்லும் போது தவறி கீழே விழுந்தவையா? என மண்டபம் கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.