பல்லடத்தில் இளம்பெண்ணை கொன்று உடலை பேரலுக்குள் திணித்த மில் தொழிலாளி

பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை பேரலுக்குள் திணத்த மில் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரலில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல்.
பேரலில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல்.
Published on

பல்லடம்:

பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) விவசாயி. இவருக்கு கிரிச்சிபாளையத்தில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

இந்த வீட்டில் அந்த பகுதியில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்த செந்தில் (40) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவருடன் ஒரு இளம்பெண்ணும் அந்த வீட்டில் குடியிருந்ததாக தெரிகிறது. ஒருசில மாதங்கள் அவர்கள் இருவரும் அங்கு குடியிருந்து வந்தனர்.

கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. அவ்வப்போது செந்தில் மட்டும் அங்கு வந்து சென்றுள்ளார்.

வீடு பூட்டிய நிலையிலேயே இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு இந்த வீட்டை வாடகைக்கு தரும்படி அதன் உரிமையாளர் ராமசாமியிடம் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை பிரகாசுக்கு வாடகைக்கு விடுவதற்கு ஒப்பு கொண்டுள்ளார். மேலும், அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து ஒரு அறையில் வைத்து விட்டு, நீங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கொள்ளுங்கள் என்றும் பிரகாஷிடம் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்களை அங்குள்ள ஒரு அறையில் பிரகாஷ் எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரலை தூக்கி அறையில் கொண்டு வைக்க முயன்றார். ஆனால் அந்த பேரலை அவரால் நகர்த்த முடியவில்லை.

பேரலின் வாய்ப்பகுதி அட்டை வைத்து இறுக்கமாக கட்டி அடைக்கப்பட்டிருந்தது. இதில் தண்ணீர் இருக்கலாம் என்று எண்ணிய அவர் அந்த பேரலின் வாய்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அட்டையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பேரலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

பேரலின் உள்ளே பார்த்த போது பெண் ஒருவரின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம்போட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கும், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த பேரலில் இருந்த பெண்ணின் பிணத்தை வெளியே எடுத்து பார்த்தனர். அழுகிய நிலையில் இருந்த அந்த பெண் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாடகைக்கு தங்கிய செந்தில் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று அங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை.

விசாரணையில் வாடகைக்கு இருந்தவர் தாராபுரம் சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது. அவரை தேடியபோது அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. செந்தில் தான் இளம்பெண்ணை கொன்று பேரலுக்குள் திணித்து மண்ணைபோட்டு மூடியிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். அதன்படி செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com