பல்லடம் அருகே பேரலுக்குள் உடல் மீட்பு- கொலையான இளம்பெண் அடையாளம் தெரிந்தது

பல்லடம் அருகே பேரலுக்குள் உடல் மீட்பு- கொலையான இளம்பெண் அடையாளம் தெரிந்தது

பல்லடம் அருகே கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் திணிக்கப்பட்டிருந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணையில் அடையாளம் காணப்பட்டது.
Published on

பல்லடம்:

பல்லடம் கிரிச்சி பாளையத்தில் செந்தில் (வயது 40) என்பவர் இளம்பெண்ணுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்தது. வீடு பூட்டியே இருப்பதால் அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் குடியேற முடிவு செய்து வீட்டை சுத்தம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பேரலில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

காமநாயக்கன்பாளையம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் கையில் எஸ்.எல். என்ற ஆங்கில எழுத்து பச்சை குத்தப்பட்டிருந்தது. தலைமறைவாக உள்ள செந்தில் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மில்லில் பிட்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அங்கு வேலை செய்த மற்ற பெண் தொழிலாளர்களிடம் பச்சை குறித்து கேட்டபோது இங்கு வேலை செய்த லதா என்பவர் கையில் எஸ்.எல். என்று பச்சை குத்தியிருந்தார் என்று கூறினர்.

லதா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லதா கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள சாவக்காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர் களிடம் நடத்திய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது

லதாவுக்கும், தாராபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் திருமணமானது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் பெயரும், தனது பெயரும் சேர்த்து ஆங்கில எழுத்தில் எஸ்.எல். என்று பச்சை குத்தியுள்ளார்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். அதன்பின்னர் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது அங்கு பிட்டராக இருந்த தாராபுரம் சின்னகாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தான் கிரிச்சிபாளையத்தில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய சில வாரங்களில் லதா கொலை செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள செந்திலை பிடித்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com