அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய ஆதிவாசி மக்கள்- பாலக்காடு அருகே பரபரப்பு

சாலை அமைப்பதை தடுத்த அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கால்களில் விழுந்து ஆதிவாசி மக்கள் கதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலை அமைப்பதை தடுத்த அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய ஆதிவாசி மக்கள்.
சாலை அமைப்பதை தடுத்த அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய ஆதிவாசி மக்கள்.
Published on

பாலக்காடு:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலைமடை பஞ்சாயத்து, பரம்பிக்குளம்புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. இதன் அருகே அடர்ந்த வனப்பகுதியில் செம்மனாம்பதி ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு, கேரளாவில் இருந்து வாகனங்கள் வர வேண்டும் என்றால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் வர முடியும்.

ஆனால் செம்மனாம் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை வசதி செய்தால் 8 கிலோ மீட்டர் தூரத்திலே பரம்பிக்குளம் அருகே உள்ள தேக்கடி செல்ல முடியும். எனவே அந்த பகுதி மக்கள் சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே செம்மனாம்பதியில் இருந்து தேக்கடிக்கு 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலை அமைக்க ஆதிவாசி தலைவர் ராமன் குட்டி தலைமையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஆதிவாசி மக்களே சாலை அமைக்கும் பணியை தொடங்கினர். இதை அறிந்த கேரள வனத்துறை அதிகாரிகள், நெம்மாறை வனத்துறையினர், மற்றும் போலீசார் விரைந்து வந்து மண்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஆதிவாசி மக்கள், அதிகாரிகளின் கால்களில் விழுந்து, நாங்கள் யாரையும் நம்பவில்லை. எங்களுக்கான வசதியை நாங்களே ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். 8 கிலோ மீட்டர் சாலை அமைப்பதால் 80 கிலோ மீட்டர் சுற்றிவர தேவையில்லை என்று கூறி கதறி அழுதனர். இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளான அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், மண் சாலை அமைக்க தடை இல்லை. ஆனால் முறைப்படி அரசு அனுமதி பெற வேண்டும். 2 மாதம் காத்திருந்தால், 100 நாள் வேலை திட்டத்தில், அந்த மக்களே சேர்ந்து சாலை அமைப்பதற்கான கூலியும் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com